காதல்...
நூலகம் என் உலகமோ...
கண்களும் தாழ் சேருமோ...
நூல்களின் வாடை நீங்குமோ...
மாலையும் தேயும் வரை...
மார்பிலே தமிழ் தகிக்குமே...!
இலக்கிய இளங்காலைகள்...
ஷேக்ஸ்பியர் இருள் வேளைகள்...
முப்பனி முன் மாலைபோல்...
ஈரமாய் என் நாட்களில்...
மேகமாய் நீயும் வர....
காற்றினில் தூறல் விழ...
மழைத்துளி கீறல் விழ...
சாலையை நீ தாண்டியே...
கவிதையாய் ஈரம் தவிர்க்கிறாய்...
ஹைக்கூவாய் முகபாவங்கள்...
கண்களில் கவிதைச் சாயங்கள்...
தூரிகை இல்லாமலே...
தூரமாய் வான் மீதிலே...
வானவில் நீ வரைகிறாய்...
அன்று தான் நீ அறிமுகம்...
காலையின் தேனீர் சுகம்...
நகை கொண்டு நான் நகர்கிறேன்...
கண்களால் நன்றி சொல்கிறாய்...
பேச்சினில் அடைமழையும் நீ...
ஆண்,பெண் இடைவெளியும் நீ...
கேலியாய் எனைக் கவிழ்கிறாய்...
மீன்களாய் துள்ளி குதிக்கிறாய்...
மீண்டுமோர் நாள் மாலையில்
நூலகத் தூண் வரிசையில்...
டார்வினை நான் தேடினேன்...
டால்ஸ்டாய் நீ தேடினாய்...
இலக்கியமும் வரலாறும்...
அறிவியலும் ஆன்மீகமும்...
வயற்காடும் வஞ்சிப்பாட்டும்...
வித்தகமாய் நீ பேசினாய்...
வார்த்தையில் பந்தாடினாய்...
வான் மழை நின்றாடினாய்...
தோழியாய் நீயும் வர...
தோள்களில் கைகள் விழ...
கண்களில் நலம் கேட்கிறாய்...
நெஞ்சத்தில் உயிர் மீட்கிறாய்...
சின்னப்பூ...வாய் புன்னகை...
ஜிலீரென என் மேல் மழை...
வீரமாய் நீ பேசுவாய்...
வெட்கமாய் நான் சிரிக்கிறேன்...
கோபமாய் நீ முறைக்கிறாய்...
குழந்தையாய் நான் கெஞ்சினேன்...
அன்பினை தந்தாடினோம்...
தந்தைபோல் எந்தன் முகம்...
காலையின் உன் கனவினில்-
வந்ததென நீயும் சொல்கிறாய்...
என்னிடம் வார்த்தை யிலை
தோழி நீ என் அருகினில்...
நண்பனின் மணக் கூட்டத்தில்...
மாலையை அவன் மாற்றினான்...
மனதினில் உன்னை தீற்றினேன்...
காலையில் பூச்சாடி நீ...
மாலையில் காற்றாடி நான்...
வீசுமே உன் தென்றலும்...
சுவாசமும் எனை வென்றிடும்...
கண்களில் காமமில்லையே...
வார்த்தையில் மோகமில்லையே...
உன்னைப் போல் நீமட்டும் தான்...
சொல்லவும் வார்த்தை முட்டுமே...
நானுனைக் காதல் கொள...
வார்த்தையும் வெளிகள் விழ...
காதலும் சொல்ல வில்லையே...
உள்ளமும் கூத்தாடுதே...
நாட்களை நான் தவிர்க்கிறேன்...
நேரத்தில் துயில் எழுகிறேன்...
ஆடைகள் நிறம் மாற்றினேன்...
சந்திக்கும் நேரம் கூட்டினேன்...
மாதங்கள் ஆண்டாகின...
மழைநதி கடல் சேர்ந்தன...
தூரமாய் நின்ற நிலா...
கைகளில் நான் எட்டிப்பிடிக்கிறேன்...
பேசியே எனைக் கொல்கிறாய்...
வேண்டுமென நானும் சாகிறேன்...
என் கவிதைகள் வாசிக்கத் துடிக்கிறாய்...
வாசித்து வாசித்தே.. கன்னத்தில் வர்ணம் பூழ்கிறாய்...
காலையில் கோவில் நடை...
மாலையில் ஐஸ்க்ரீம் குடை...
நாட்களெல்லாம் அழகு வெட்கத்தில்...
நீயுமிப்போதென் பக்கத்தில்...
அன்றுனைக் காணவில்லை...
ஐம்புலன் தூங்க வில்லை...
என்னவென பதறிப் போகிறேன்...
என் மனதில் சிதறிச் சாய்கிறேன்...
கடந்ததே நாட்கள் சில...
மாலைச் சூரியன் கைகள் விழ...
தூரத்தில் நீயும் வர...
தோளினில் சாய்ந்தே அழ...
நெஞ்சமும் தடுமாறுதே...
பக்கமாய் நீயும் வர...
பரிச்சய வார்த்தை தர...
என்நலம் நீ கேட்கிறாய்....
புன்னகை மாறாமலே ...
மீன்களாய் வெட்கம் விழ...
ஞாயிறில் மணப் பெண்ணென...
மாலை உன் தோள் வருமென...
வாழ்த்து நீ உன் கவிதையில்
சொல்லவும் வேண்டுமென்கிறாய்....
என்னையும் அழைப்புவிடுக்கிறாய்...
எப்படி உன்னால் ஆகிறது...
என் மனம் தணலாய் வேகிறது...
சொன்ன உன் தேள் வார்த்தைகள்...
இதயத்தின் தாழ் உடைக்குதே...
உன்னிலே காதல் இல்லையா...
என்னிலும் விருப்பம் இல்லையா...!
உன்னிடம் கேட்காமலே...
மௌனமாய் மென்று தின்கிறேன்...
நிச்சயம் நானின்றியா?
என் பணி ஏதுமின்றியா?
முதல்நாள் வந்து நிற்கிறேன்...
உத்தரவு தா! என்கிறேன்...
தோழியே! எனைச் சபித்திடு...
அற்பமாய் புறந்தள்ளிடு...
காதலாய் பறந்து திரிந்தவன்...
இறகுகள் பிய்ந்து போகுதே...
உன்னத உன் தோழமை...
என் கனா கொச்சை செய்ததே...
யாரடி நீ மோகினி...
எப்படி விலக நான் இனி....
ஊனப் பறவை இன்று நான்...
எப்படி என் வடு மறைப்பேன்...
சுத்தமாய் என் எண்ணங்கள்...
சலவையாய் வெம்மையாகுதே...
காதலாய் நீ இல்லையே...
நானும் தான் சொல்ல வில்லையே...
நெஞ்சத்தில் பழுத்த ஆணியாய்...
கேள்விகள் எனைத் துளைக்குதே...!
காதலில் தோற்காவிடில்...
ஆழங்கள் அறிவதில்லையோ...
கிறுக்கலாய் என்கவிதைகள்...
கிளிஞ்சலாய் மாற்றிப் போகிறாய்...
நானும் தான் அழவில்லையா?
கண்ணீர்தான் மெய்யின் தொல்லையா?
நெஞ்சத்தில் ஈரப் பஞ்சு போல்...
எடைதரும் உன் நட்பின் அன்புதான்....
காகிதப்பூக்கள் வாசத்தை
காற்றும் தான் அறிவதில்லையா?
பூச்சாடி வாடித்தீர்ந்ததோ...
காற்றாடி... கவிழ்ந்து வீழ்ந்ததோ...
சொல்லாமல் நான் போகிறேன்...
திசைகளே இல்லா பாதையில்...
ஆண்டுகள் கரையுமில்லையா...?
என் நினைவு உனக்குத் தொல்லையா...
அன்றெனை நீ வெறுக்கவில்லையா...
கிறுக்கினேன் ... தினம் இரவினில்...
இவையெல்லாம் உன் கரம் சேருமோ...!
எப்படி நான் அறியவோ...
தோழனாய் நான் தொலைகிறேன்...!
தோழியாய் நீ மறைகிறாய்...
பனிவிழும் முன்காலையில்...
கிறுக்கல் ரசிக்க உனைத் தேடினேன்...!
0 comments:
Post a Comment