Sunday, 10 February 2013

kavithai


                        அந்தநாள் ஞாபகம்-கே.எஸ்.கலை 

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க 
காட்டுவழி ஒத்தயடி நடந்து போன காலமது ! 
ஆண்டு பல அழிஞ்சிப் போயும் மனசுக்குள்ள - 
அழியாம தேங்கி நிக்கும் அந்தநாள் ஞாபகமிது ! 

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும் 
ஏழக் குடும்பத்து ஏழுபேரில் நானொருத்தன் 
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும் 
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது ! 

எங்களுக்கு பால் குடுத்து வளத்துவிட்ட அம்மாவும்
எத்தனையோ கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும் 
அட்டைக்கு ரெத்தம் குடுத்து அல்லோடு பகலுழச்சி 
அஞ்சிப் பேர படிக்க வைக்க அல்லல் பட்ட காலமது !

ரோட்டோர வாக மரம் குளிர் காத்த வீசுரப்போ 
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசும் - 
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்து 
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் ! 

வெட்டுத் துணி ஒட்டு - போட்டுத்தச்ச புத்தகப் பை 
வெள்ளநிறம் மாறிப்போன பள்ளிக் கூட சீர்உடுப்பு, 
எள்ளி நகையாடி என்ன கொன்ன கூட்டமுண்டு 
எல்லாரயும் அன்னைக்கே மனசார மன்னிச்சே(ன்) !

பள்ளிவிட்டு வீடு வந்து பால்பேணி தூக்கிகிட்டு 
துள்ளிக் குதிச்சி - குறுக்குப் படி எறங்கியோடி 
பால்காரன் வாரவர பசியோட காத்திருந்து, 
ஊத்திபுட்டு படியேறி வூட்டுக்குநா ஓடிவருவேன் ! 

சோறிருந்தா கொட்டிகுவே இல்லாட்டிகணக்கில்ல 
பழகப்பட்ட வயித்துக்கு பசியால வருத்தமில்ல 
கூடபொறந்த நாலுபேரும் இப்படி தான் இருப்பாங்க 
கூட்டணியா கூத்தடிப்போ அந்தியில எந்தநாளு(ம்)!

பாக்குபட்ட கரத்தய பள்ளத்துல இழுத்துக்கிட்டு 
கொட்டப்பாக்கு பம்பரத்த கொக்கரிச்சி உருட்டியாடி 
தென்னமட்ட கிரிக்கட்ட தெவிட்டாம தினமாடி 
காட்டுக்குச்சி கிட்டிபுள்ளு கலகலத்த காலமது ! 

சொல்லிகிட்டே போகலாங்க அந்தகால நினைவுகள
தேனாக இனிக்கும் சில தேளாக கொட்டும் சில 
தானாக என்ன தட்டி எண்ணத்த சொட்டுதிங்க 
தாலாட்டும் அந்த நெனவெல்லாம் சொகம்தாங்க ! 

0 comments:

Post a Comment